Saturday, April 17, 2021

கோடி கொடுத்தாலும் கிடைத்தற்கரிய கூளூர் பெருமானின் தரிசனம் ..

அன்பர்களே அதிசயம், அற்புதம் என்று எந்தனை வார்த்தைகளால் விவரித்தாலும் அது மிகையில்லை.

16 பேறுகளையும் அளிக்கும் 16 பட்டைகளை கொண்ட பெரிய திருமேனி .
தரிசிக்கும் அனைவரையும் ஒரு கணம் சிலிர்க்க வைக்கும்

அவன் அருள் கிடைக்கப்பெற்ற மிகச்சிலரே இப்பெருமானை தரிசித்துள்ளனர் ...
உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் ...

எங்குள்ளது கூளூர் ?
திருவள்ளூர் மாவட்டம் , திருவாலங்காடு ஒன்றியம் , திருவள்ளூர் திருத்தணி செல்லும் பாதையில் 14 கிலோமீட்டர் தொலைவில் ராமஞ்சேரி அடுத்து கூளூர் பேருந்து நிறுத்தம் வரும் .அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இப்பெருமான் கூரையில் குடி கொண்டுள்ளார் .

அருகில் ராமஞ்சேரியில் வசிக்கும் அடியார் வேலு அவர்கள் குடும்பத்தினர் இப்பெருமானுக்கு சேவை செய்து வருகின்றனர் .
பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது . அன்பர்களே இவர்தம் சிவபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது .... தற்காலத்தில் கருவறை உள்ளேயே குழாய் பதித்து கொள்கின்றனர் வசதிக்காக . ஆனால் இவர்களோ வெகு தூரத்தில் இருந்து வண்டியில் அபிஷேக நீர் எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகிக்கின்றனர் . பால் , பன்னீர் மற்றும் இதர பொருட்களால் இவருக்கு செய்யப்படும் அபிஷேகம் 16 பட்டைகளின் வழியே வரி வரியாய் இறங்குவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும் ..
மக்கள் வருகை இல்லை ...காட்டு பகுதி என்பதால் வசதிகள் இல்லை என்றெல்லாம் எண்ணாமல் இப்பெருமானை இவர்கள் உளமார பூசிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது .... பெருமான் இந்த அடியாரை ஆட்கொண்டதே தனி கதை ....

காடு போன்று வனாந்திரமாக உள்ளது பெருமான் எழுந்தருளியிருக்கும் பகுதி .
எனினும் பிரதான சாலையிலிருந்து அரை கிலோமீட்டரே உள்ளது என்பதால் விசாரித்து எளிதில் அடைந்து விடலாம் .. திரு வேலு அவர்களின் அலைபேசி எண் தந்துள்ளேன் ..இவர் அருகில் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராமஞ்சேரி என்னும் இடத்தில் வசிக்கிறார் .தரிசனம் செய்ய உதவுவார் . ராமஞ்சேரியிலும் மிக புராதனமான சிவத்தலம்ஒன்று உள்ளது .

அடியார்கள் கவனத்திற்கு :

இப்பெருமானது பெயரோ , தல புராணங்களோ , அல்லது செவி வழி செய்திகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை

இப்பகுதியில் மேலும் 4, 5 திருமேனிகள் வழிபாடின்றி , வயல் வெளிகளில் கேட்பாரற்று கிடப்பதாக கூறுகிறார்கள் .

அன்பர்களே கைடைசியாக ஒன்று ..... சென்று தரிசனம் செய்யுங்கள் ..... திரு வேலு அவர்கள் குடும்பத்தினர் தனியாக இப்பணியை செய்து வருவதால் அவர் தம் கரத்திற்கு வலு சேர்க்க நீங்கள் விரும்பினால் ....பூசை பொருட்கள் , எண்ணெய் வாங்கி தந்து உதவலாம் ..நந்தியெம்பெருமான் கூரை இல்லாமல் உள்ளார், அவருக்கு கூரை அமைத்து தரலாம் ..
நீங்கள் செய்யும் சிறு உதவியும் மகேசனை நேரடியாக சென்றடையும் என்பது திண்ணம்

திரு வேலு : 9894590161

அடியார் வேலு அவர்களின் புதல்வர் கைவண்ணத்தில் மிளிரும் பெருமான் இதோ உங்களுக்காக...












Monday, March 29, 2021


அல்லல் என் செய்யும்? அருவினை என் செய்யும்? அகரம் மகாதேவர் அருள் இருக்கையில் ...!

அன்பர்களே ....! பிறவி பெரும்பயன் உள்ளவர்களே இத்திருத்தலத்தை  தரிசிக்க இயலும் ...நீங்கள் அனைவரும் இப்பயனை பெறவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.....

திருவள்ளூர் மாவட்டம் திருக்கோயில் உடைத்து என்றால் அது மிகையில்லை .அதிகமான கிராமங்களையும் அங்கெல்லாம் மிக புராதமான திருக்கோயில்களையும் கொண்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் .

விவசாயம் பிரதான தொழில் என்பதால் , எங்கெங்கு காணினும் விவசாய நிலங்களும் தூய்மையான காற்றும் மனதுக்கு அமைதி தரும் சூழலில் அத்தகைய திருக்கோயில்கள்  அமைந்திருக்கும் ...

அப்படிப்பட்ட ஒரு திருக்கோயிலை தான் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன் ....

1400 ஆண்டுகள் பழமையான மனோன்மணி அம்பிகை சமேத மகாதேவர் திருக்கோயில் அகரம் கிராமம் .திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஒன்றியம் ....கடம்பத்தூரிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அகரம் கிராமம் .

திருவள்ளூர் மாவட்ட திருக்கோயில்களிலேயே மிகப்பெரிய லிங்கத்திருமேனி இத்திருக்கோயிலில் தான் உள்ளது ...

இப்பெருமானை பற்றிய புராண வரலாறுகளோ , செவி வழி செய்திகளோ இதுவரை அறியப்படவில்லை ...
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாய நிலமாக இருந்த இப்பகுதியில் , சற்றே மேடான ஒரு பகுதியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற திருவுளம் கொண்டார் இப்பெருமான் ...

தோண்டி பார்த்தபோது மிகப்பெரிய பாண லிங்க வடிவில் எழுந்தருளினார் ..

பன்னெடுங்காலமாக தன் இரு பிள்ளை (யார்கள்)களுடன்  வெட்ட வெளியில் அருள்பாலித்து வந்த இப்பெருமானுக்கு அரும்பாடுபட்டு அருமையான திருக்கோயில் ஒன்றை அன்பர்கள் அமைத்துள்ளனர் ..

அன்னை மிகவும் பின்னப்பட்டு விட்டதால் புதிதாக நிறுவியுள்ளார்கள் ....

இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ..அவ்வளவு அழகு மனோன்மணி அம்மை .நந்தியெம்பெருமான் அழகையும் அவசியம் கூற வேண்டும் .பெரிய திருமேனி .

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் உள்ளார் அகரம் மகாதேவர் ....மிகப்பெரிய நாகாபரணத்துடன் பிரம்மாண்டமாக கருவறையில் வீற்றிருக்கும் இப்பெருமானை விட்டு கண்கள் அகல மறுக்கிறது ..மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் எழில் மிகுந்த பருத்த திருமேனி ....

இவரை தரிசிக்கும் மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் யாவும் நம்மை விட்டு நீங்கும் உணர்வு மேலிடுகிறது .இவர் நமக்காகவே வந்தவர் .....மண்ணை பிளந்து கொண்டு வந்தவர் ....நம் துயர் துடைக்க வந்தவர்....

இவரை பாராமல் நாம் வாளாவிருக்கலாமா ?  
அகரம் மகா தேவரின் திருவடிகளை பற்றிக்கொள்ளுங்கள் ..
கொரானாவும் தலை தெறித்து ஓடும் ..

திரளாக வாருங்கள் அன்பர்களே........

பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் எளிதாக தரிசிக்கலாம் இவரை .
மற்ற நாட்களில் அவசியம் கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம் ..
எண்கள் தந்துள்ளேன் ஏமாற்றத்தை தவிர்க்க ..

பக்தர்கள் வருகை குறைவான கிராம பகுதி என்பதால், அவர்களால் நாள் முழுதும் திருக்கோயிலை திறந்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

அலைபேசி எண்கள் :
9159055306
9894936427



முன்பிருந்த நிலை 



Saturday, March 27, 2021


அன்பர்களே ....நீங்கள் கோவிலுக்கு செல்ல எண்ணினால் இத்தகைய திருக்கோயில்களுக்கு செல்லுங்கள் .

நீங்கள் செலுத்தும் காணிக்கை எத்துனை சிறிதாயினும் இத்தகைய திருக்கோயிலுக்கு தட்டில் செலுத்துங்கள் ..

அவை உண்மையில் இறைவனை சென்றடையும் ...

ஆம் !.அன்பர்களே...
நம் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் எண்ணிலடங்கா வெளிஉலகிற்கு தெரியவராத அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னுள் அடக்கிய திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டுள்ளது .
சுற்றிலும் வயல் வரப்புகளும் , சிலு சிலுவென்ற காற்றும் நெஞ்சை அள்ள , அமைதியும் ஏகாந்தமும் கொண்டு ஈடில்லா ஆன்மீக அனுபவத்தை அள்ளித்தர காத்திருக்கின்றன அத்திருக்கோயில்கள் ....

வருவதற்கு நீங்கள் தயாரா? 

அப்படியெனில் வாருங்கள் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் , கடம்பத்தூர் பேரம்பாக்கம் வழியில் உள்ள கண்டிகை கிராமத்திற்கு ....

அங்கு பச்சைப்பசேல் வயல்களினூடே கோயில் கொண்டுள்ளார் மரகத லிங்கத்திருமேனி கொண்ட மரகத லிங்கேஸ்வரர் ...பச்சை மரகத கல்லினால் ஆனவர் ...அன்னை மரகத வள்ளி .

மிகப்பெரிய இத்தகைய மரகத திருமேனிகள் மிக அரிது ....பளபள வென்ற அவர் திருமேனியில் நாம் முகம் பார்க்கலாம் ...

அன்பர்களே இத்திருக்கோயில் திருப்பணியில் உள்ளது .இறைவன் மட்டுமே கருவறையில் குடிபுகுந்துள்ளார் இறைவி இன்னமும் மழையிலும் வெயிலிலும் காய்ந்தபடி தான் உள்ளார் .
இங்கு வர கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் ...ஸ்ரீராம் நகர் என்றும் சொல்கிறார்கள் பிரதான சாலையிலிருந்தே நீங்கள் கோவிலை காணலாம் .ஆயினும் சற்றே வயல் வரப்பில் நடந்து தான் வர வேண்டும் .சாலை வசதி இன்னமும் இத்திருக்கோயிலுக்கு ஏற்படுத்தி தரவில்லை ...

கண்டிகை என்ற பெயரில் அநேகம் ஊர்கள் உள்ளது . எனவே  புதுமாவிலங்கை கண்டிகை என்று கேட்டு இறங்குங்கள் .புதுமாவிலங்கையிலும் புராதனமான திருக்கோயில் ஒன்று உள்ளது .

நான் சென்றபோது ஒருவரும் இல்லாத நிலையிலும், ஜடா முடி தரித்த சாது ஒருவர் இப்பெருமானை கடமையே கண்ணாக , அபிடேகம் செய்து பூசித்து கொண்டிருந்தார்.

பக்தர்கள் வருகை இல்லாத நிலையிலும் அவர் ஒருவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை ..தான் உண்டு ....எம்பெருமான் உண்டு ......

அன்பர்களே அதனால் தான் சொல்கிறேன் ....கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கொரானாவை வலிய வரவழைத்துக்கொள்ளாதீர்கள் ..

கிராமத்து கோயில்களுக்கு விஜயம் செய்யுங்கள் ..இறைவன் தங்கள் குறைகளை களைவதற்கு அங்குதான் விஸ்ராந்தியாக காத்துள்ளார் ..
மன ஆரோக்கியம் ..உடல் ஆரோக்கியம் இரண்டுக்கும் உத்திரவாதம் கிராமங்களில் தான் .
வெகு அருகில் அகரம் மகாதேவர் திருக்கோயில் உள்ளது ...திருப்பணி முடிவுபெற்று சிறப்புடன் விளங்கும் இத்திருக்கோயில் அலைபேசி எண்கள் கொடுத்துள்ளேன் .கண்டிகை திருக்கோயில் அலைபேசி எண் இல்லாததால். 

இவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் இரு கோவிலையும் தரிசிக்கலாம் .

அகரம் திருக்கோயில் 

9894936427
9159055306







Wednesday, March 24, 2021

 தடைகளை தகர்த்தெறியும் தன்னிகரற்ற திருத்தலம் .....நாகதோஷம் போக்கும் நாகமலீஸ்வரர் .

இழந்த பதவியை மீட்டெடுக்க அருள்புரியும் அம்பிகை ......

வேறென்ன வேண்டும் அன்பர்களே ......

.வாருங்கள் நல்லதையெல்லாம் நலமுற அளிக்கும் நாலூருக்கு ...

அசுரர்களான ராகுவும் கேதுவும் தேவர்களைப்போன்று வேடமணிந்து நயவஞ்சகமாக அமிர்தம் உண்ட காரணத்தினால்,சபிக்கப்பட்டு பூலோகம் வந்து,அலைந்து திரிந்து பின் நாரதரின் ஆலோசனையின் படி பல இடங்களில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து  வழிபட்டு வந்தனர் .

விமோச்சனம் பெற வழியின்றி களைத்த இருவரும்  இறுதியாக இத்தலம் வந்து சேர்ந்தனர் .

என்ன அதிசயம் ........மிக அழகான ஒரு தாடகத்தையும் அதன் நடுவே ஸ்வர்ணமயமாக பூத்திருக்கும் மல்லிகை பூக்களையும் கண்டு அதிசயித்து , அதன் அருகே சென்றபோது ஆஹா ...இது நாம் தேடி வந்த அன்னை ஸ்வர்ணாபிகையே என்று உணர்ந்தனர் ....

அருகே சுயம்புவாக எழுந்தருளியுள்ள நாகமலீஸ்வரரையும் கண்டு மனம் கசிந்துருகி வணங்கி சாப விமோசனம் பெற்று தேவலோகம் திரும்பினர்.

இது வரலாறாகும் .

பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் மிகப்பெரிய திருக்கோயில் கட்டப்பட்டு, விழாக்கள் பல கண்டது இத்தலம் 

 பெருமை வாய்ந்த இச்சிவாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது . பின் அன்பர்களின் பெருமுயற்சியால் சீரமைக்கப்பட்டு , அற்புத நாக தோஷ நிவாரண தலமாக திகழ்கிறது.

நாலூர் எனப்படும் இத்தலம் சென்னை-கும்மிடிபூண்டி மார்கத்தில் மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 1km இல்அமைந்துள்ளது. 

.கருவறையில் அற்புத லிங்கதிருமேனி கொண்டு எழிலுடன் அருட்காட்சி நல்குகிறார் நாகமலீஸ்வரர் ..

ஸ்வர்ணத்தினால் ஆன பூக்களில் தோன்றியமையால் அம்பிகை ஸ்வர்ணாம்பிகை என பெயருடன் விளங்குகிறாள் 

.அன்பர்களே மிக சிறந்த நாகதோஷ பரிகார, இழந்த பதவியை திரும்பப்பெறும் பரிகார தலமான இத்தலத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள் 

பின் அதிசயங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்வதை நீங்கள் கண்கூடாக காணலாம் .

பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது இத்தலத்தில் .

அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மற்றைய நாட்களில் தரிசிக்கலாம் .


9444 320328

91769 67689

99407 68822




Friday, March 13, 2020

மாங்கல்ய பலம் என்றென்றும் நிலைத்திருக்க .....

நீடித்த மாங்கல்ய பலத்திற்கும் , நிலையான திருமண நல்வாழ்விற்கும் மிகசிறந்த பரிகார தலம் நம் நாகை மாவட்டத்தில் உள்ளது .....

ஆம் அன்பர்களே திருமங்கலம் பூலோகநாயகி சமேத பூலோகநாதர் திருக்கோயில்தான் அது .

திருமங்கலம் என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இத்திருமங்கலம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் குத்தாலம் வட்டத்தில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி அருகில் உள்ளது .

எண்ணற்ற திருத்தலங்கள் சூழ இத்தலம் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது .திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி ,மேலை திருமணஞ்சேரி ,குத்தாலம் போன்ற தேவார பாடல் பெற்ற தலங்களும் இதில் அடங்கும் ....

அங்கெல்லாம் செல்லும் அன்பர்கள் திருமங்கலம் பூலோகநாதரையும் தரிசித்து அருள்பெருங்கள் .

ஏனெனில் இத்தலத்தின் மகிமையும் புராதன பெருமையும் அளவிடற்கரியது .கிடைத்தறிய இத்தலத்தில் தான் குபேரன் திருமாங்கல்யத்திற்க்காக  மஹாலஷ்மியிடமிருந்து பொன் பெற்றதாக ஐதீகம் ....அருகில் அமைந்துள்ள பொன்னுர் என்னும் கிராமம் இதனை உறுதி செய்கிறது .

வேள்வி நடந்த இடம் வேள்விக்குடி ...திருமணம் நடைபெற்றது திருமணஞ்சேரி என அருகருகில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை .

கடுமையான திருமண தோஷம் உடையவர்கள் இங்கு ஒரு சிவராத்திரி தினத்தன்று வந்து முதல் ஜாமத்தில் இப்பெருமானையும் இரண்டாம் ஜாமத்தில் மாங்குடி சிவலோகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் பொய்கைக்குடி நாகநாதரையும் வணங்கி பின் மறுபடியும் நான்காம் ஜாமத்தில் இப்பெருமானை வணங்கி நிறைவு செய்ய , உடன் 
திருமணம் கைகூடும் 

அதுமட்டுமல்ல அன்பர்களே, ஆயுள் விருத்தி தலமாகவும் இத்தலம் விளங்குகிறது ...இங்கு வசிஷ்டருக்கு இறைவன் காலசம்ஹார மூர்த்தியாக தரிசனம் அளித்து , இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுள் பலத்தையும் அளிக்கிறார்.எனவே இங்கு சஷ்டியப்த பூர்த்தி , சதாபிஷேக ஹோமங்களை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும்.

மற்றுமோர் சிறப்பம்சம் இங்குள்ளது ....வேறெங்கும் காணமுடியாத வகையில் இத்தலத்தில் முருகப்பெருமான் ப்ரம்ம சாஸ்தா வடிவத்தில் வீற்றிருக்கிறார் ...சிறந்த அறிவாற்றல், நல்ல கல்வி தகுதிக்காக இவரை நாம் வழிபடலாம் ...
வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியோடு தம்பதி சமேதராக மிருத்யுஞ்ச ஹோமம் புரிந்த தலம் ஆகையால் இங்கு வந்து வணங்கும் பெண்கள் மாங்கல்ய பலம் கூடும் ..
காண்பதற்கரிய இத்தலத்தை அன்பர்கள்தவற விடாமல்  வாழ்வில் ஒரு முறையேனும் வணங்கி இறையருள் பெறுங்கள் .

ஆலய அர்ச்சகர் திரு மோகன் அவர்கள் 

அலைபேசி எண் :9486181657
திருப்பணிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புடைபடங்கள் 






Thursday, March 12, 2020

புராதனமான இத்தலத்தை தரிசித்தால் கொரானாவும் தலைதெறித்து ஓடும் ...

முத்தான இரு திருக்கோயில்கள் ....முத்தே சிவலிங்கங்களாக மாறிய திருக்கோயில் 
அவ்வாறு தெறிக்க ஆடிய ஆலங்காடு தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில் ..

தூசு இல்லை ...காற்று மாசு இல்லை ....ஜன நெரிசல் இல்லை 
மாஸ்க் அணியாமல் தைரியமாக சென்று வரலாம் வாருங்கள்,
அழைத்து செல்கிறேன் ....


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவாலங்காடு திருத்தலம் நம்மில் பலரும் அறிந்ததே ....
இங்கு இறைவன் ஆடிய இரத்தின சபை பஞ்ச சபைகளில் முதன்மையானது ....ஆனால் பலரும் அறியாதது 
இத்தலத்தை சுற்றிலும் ஏராளமான இத்தலத்துடன் தொடர்புடைய திருக்கோயில்கள் உள்ளன.
அவற்றையும் அன்பர்கள் தரிசித்து பலன் பெற வேண்டும் ...
ஒரே தலத்தையே  தரிசித்திராமல் , பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே கொண்டுள்ள கிராமபுரங்களில்  உள்ள இத்தகைய  திருத்தலங்களை தரிசிக்கும்போது கிடைக்கும் மன நிறைவு ,ஆத்ம திருப்த்தி வேறெதிலும் கிடைப்பதில்லை 
அன்பர்களே ....,
அத்தகைய ஒரு திருக்கோயில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , மப்பேடு அடுத்த முதுகூர் என்னும் திருத்தலமாகும் 

ஒன்றல்ல இரண்டு திருக்கோயில்கள் இத்தலத்தில் உள்ளன.
திருப்பணி செய்யப்பட்டு பேரழகுடன் விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .மற்றும் முத்தீஸ்வரர் திருக்கோயில் இக்கிராமத்திற்கு அழகு சேர்க்கிறது .சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வேறெங்கும் காண முடியாத0 ஓர் அதிசயம்  வைணவ புருஷர் ஸ்ரீமன் ராமானுஜருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பதே ...சைவ  வைணவ ஓற்றுமைக்கு இது ஒரு உதாரணமாகும் மிகுந்த ஈர்ப்புடன் இவரது சிலா ரூபம் உள்ளது ..

இத்திருக்கோயிலிருந்து சற்று தள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக முத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது .அற்புதமான பெரிய திருமேனி காண்போரை பரவசப்படுத்தும் ...சிறிய இருக்கோயில் என்றாலும் , விஸ்தரிக்க முயற்சி மேற்கொடுள்ளனர் அன்பர்கள் ..


எங்குள்ளது ?

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையாகும் முதுகூர் ....
பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் பேருந்துகள் மப்பேடு செல்கின்றன .அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இக்கிராமம் ....
பேரம்பாக்கம் வழியாகவும் வரலாம் ...



முத்தீஸ்வரர் திருக்கோயில் 

சுந்தரேச பெருமான் முன்பிருந்த நிலை 


Monday, March 9, 2020

யார் சீரழித்தால் என்ன? நாம் சீரமைப்போம் வாருங்கள் !!!!!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று .....

நம் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திருக்கோயில்களை காப்பது நம் புனிதமான கடமைகளில் ஒன்று ....

அப்படி கஜா புயலின் காரணமாக 3 வருடத்திற்கு முன் நின்று போன திருப்பணி வேலைகளை மீண்டும் துவங்கியிருக்கும் ஓம்காரம் இறைபணி மன்றத்தினருக்கு உதவிட உங்களை அன்புடன் அழைக்கிறோம் ...

ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வர் திருக்கோயில் 

திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி வட்டம் , கச்சனம் அருகே உள்ளது இச்சிறிய கிராமம் .மிகவும் சிதைத்து போன இத்திருக்கோயிலைபுனரமைக்க  தற்போது அன்பர்கள் பெரும்முயற்சியுடன் களமிறங்கி உள்ளனர் .

அன்பர்களே ...ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் .

செயற்கரிய இறைப்பணியில் ஈடுபடும் அன்பர்கள் டாடாவோ , பிர்லாவோ அல்லர் ....மிக சாமானியர்கள் தான் இத்தகைய பணியில் ஈடுபட முற்படுகின்றனர் ..அவர் கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் ...

தற்போது சுவாமி விமான வேலைகளும் , அம்பாள்  சன்னதி புதிதாக அமைக்கவும் மணல் , செங்கல் சிமென்ட் மற்றும் ஸ்தபதியார் சம்பளத்திற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது ....

ஒரு சிவாலயத்தை சீரமைப்பது என்பது ,பல ஜென்மங்களில் நாம் செய்த புண்ணிய பலன்களால் கிடைப்பது .இதனை நாம் இழந்துவிட கூடாது ...

அலைபேசி எண் தந்துள்ளேன் ...
ஓம்காரம் இறைபணி மன்றம்.. 9095265980

அழையுங்கள் ....உங்களால் இயன்றதை வழங்குங்கள் ..
இயன்றதை செய்வோம் இல்லாத ஆலயங்களுக்கு .....



இத்திருக்கோயிலின் முந்தைய நிலை 



Sunday, March 8, 2020

அண்டம் போற்றும் தண்டந்தோட்டத்து தயாபரன்.

➲அகத்தியருக்கு திருமணகாட்சி கொடுத்த இடம் .
➲முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தன் திருநடன காட்சி அருளிய தலம்.
➲தன் தந்தையின் காலிலிருந்து கழண்ட மணியை கண்டெடுத்து, பின் காலில் கட்டிவிட்டு 'மணி கட்டிய 'பிள்ளயார் எழுந்தருளியிருக்கும் தலம்.
➲திருமண தடை அகற்றும் தலம்.
➲சஷ்டியப்த பூர்த்தி , ஆயுஷ் ஹோமம் , பீமரத சாந்தி ,சதாபிஷேகம் போன்றவை இங்கு இத்தலத்தில் செய்து கொள்வதால் ஆயுள் விருத்தி கூடும் ....

தாண்டவர் தோட்டம் எனப்படும் இத்தலம் மருவி 'தண்டம் தோட்டம் ' என அழைக்கபடுகிறது. நர்த்தனபுரி என்பது புராண பெயர் .தேவார வைப்பு தலமும் கூட .
அன்னை சிவகாம  சுந்தரி 
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் , அகத்திய தீர்த்தம் 
தல விருட்ஷம்  : வன்னி 
எங்குள்ளது ?

திருநாகேஸ்வரம் அருகில் அம்மன்குடி ,முருக்கன்குடி தாண்டியதும் இத்தலம் உள்ளது.
ஒரு வைகாசி விசாக நட்சத்திர நன்நாளில் அகத்தியருக்கு ஸ்ரீ காத்யாயினி சமேத கல்யாண சுந்தர மூர்த்தியாக காட்சியளித்த தலம் .அந்நாளில் இங்கு வந்து தரிசிப்போருக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம் .

புத்திர பாக்கியம் தடைபடுதல் , திருமண தடை, கல்விச்செல்வத்தில் பின்தங்கியிருத்தல் , செல்வ வளம் குன்றுதல் , வியாபாரத்தில் மந்தநிலை போன்ற அனைத்து தடைகளும் இங்கு வந்து தரிசிப்போருக்கு படிக்கற்களாக மாறும் .
விசாக நட்சத்தன்று வழிபட வேண்டிய பரிகார தலம் 
மிகப்புராதனமான அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஒன்று இங்கு வழிபாடற்று உள்ளது 

இத்திருக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும் 
திருநாகேஸ்வரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு ...108  வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோயிலிருந்தும் இங்கு செல்ல சாலை வசதி உள்ளது ..

தண்டந்தோட்டத்திற்கு அருகில் உப்பிலியப்பன் கோயில் , ஐய்யாவாடி பிரத்யங்கரா தேவி திருக்கோயில் , திருநாகேஸ்வரம் அம்மன்குடி நடார் ஆகிய திருக்கோயில்கள் தரிசிக்க தக்கவை 

ஆலய தொடர்பிற்கு :
திரு நடராஜ குருக்கள் 
0435 2446019

09443070051



Monday, November 11, 2019

அல்லல் என் செய்யும் ? அருவினை என் செய்யும் ? ஆபத்தாருண சுவாமி கடைக்கண் பார்வை முன்னே ...

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )

காரைக்கால் -பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ....இத்திருக்கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது ஆபத்தாருண சுவாமி திருக்கோயில் .
சட்டநாதர் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலை கண்டால் கதறி விடுவீர்கள் ........

மிகச்சிறந்ததொரு பரிகார தலம் மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி , ஒரு நல்ல ஓவியத்தை கண்ணா பின்னா வென்று கசக்கி போட்டதுபோல் உள்ளது அதன் இன்றைய நிலை .

சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் இங்கு உள்ளது . இது சகல ரோகங்களையும் நொடியில் போக்க வல்லது ...... குறிப்பாக தொழு நோய் ....இந்நோய் உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை உளமார வணங்கி , இந்நீரினை பருகி வர தொழு நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ...

இன்று இத்தீர்த்தம் சுருங்கி ஒரு கிணறு மட்டுமே காட்சியளிக்கிறது ......

கருவறையில் இறைவன் ஆபத்தாருண சுவாமி , நம் ஆபத்துகளை களையும் விதமாக தேஜோமயமாக விளங்குகிறார் ......பார்த்த மாத்திரத்தில் நம் கண்கள் பணிக்கிறது ....

திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
       
அவர் மொபைல் எண் 9962184946

இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .

அன்பர்களே ......இறைவன் கருணை கடல் தான் ...ஆனால் நாம் மொள்ள உபயோகிக்கும் பாத்திரம் தான் மிக சிறிது . இது யாரால் சொல்லப்பட்ட வரிகள் என்பது தெரியவில்லை ....ஆனால் இத்திருக்கோயிலை  பார்க்கும்போது  இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது ..


Thursday, November 7, 2019

90% சென்னை மக்கள் அறியாத சென்னை சிவப்பதிகள் ...
தொலைந்து போன அடையாளங்கள் ....

முன்பு இருந்தது போல் அன்று சென்னை மாநகரில் ஆளுயர கட்டடங்கள் இல்லை ... பேருந்து வாகன நெரிசல்கள் இல்லை ....தொழில் நுட்ப வசதிகள் இல்லை 

ஆனால் 
வானுயர திருக்கோயில்கள் இருந்தன ...
தேரோடும் வீதிகள் இருந்தன ....
ஆன்மீக ஈடுபாடு இருந்தது ......

அசுர வளர்ச்சியாலும் அந்நியர்கள் படையெடுப்பு , மற்றும் மாற்று மதத்தினர் காழ்ப்பு உணர்ச்சியாலும் நம் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த திருக்கோயில்களின் மூலவர்கள் சிலவற்றின் நிலைமையை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம் வாருங்கள்...
அமைஞ்சிக்கரை , சேத்துப்பட்டு பகுதி 

அமைந்தகரை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 
அகத்தியர் வழிபட்ட ஒரு காலத்தில் மிகப்பெரிய திருக்கோயிலாக கோலோச்சி கொண்டிருந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் இன்று ஆனந்தவல்லி தெரு முனையில் ஒரு மரத்தடியில் உள்ள மிகச்சிறிய அம்மன் கோயில் ஒன்றில் பாணம் உயரம் குறைக்கப்பட நிலையில் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் அது தான் உண்மை. 

கிட்டத்தட்ட தூக்கி வீசப்பட்ட இவரது பிரம்மாண்டமான திருக்கோயில் இருந்த இடத்தில் தற்போது தேவாலயம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது ...

இருப்பிடம் ...அய்யாவு நாயுடு காலனி , விஜயேஸ்வரி தெரு .....சர்ச் அருகில் ..
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு கைலாயநாதர் 

அடுத்து நாம் தரிசனம் செய்ய இருப்பது குட்டலை அம்மன் கோயில் (கட்டளை தான் குட்டலை ஆகிவிட்டது )
வளாகத்தில் அமர்ந்து அருள்பலிக்கும் கைலாயநாதர் .....சேத்துப்பட்டு .
இவரும் தனி பெரும் கோயில் கொண்டு விளங்கியவர் தாம் ....
மிக சிறிய கோயில் தான் ..சுயம்பு லிங்க திருமேனி . 
என்ன விசேஷம் என்றால் இவர் திருமேனியில் ஓம் என்று பொளிந்து வைத்துள்ளார்கள் ....
உளி கொண்டு .....ஏன் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம் .
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு சிவன் 1

அடுத்து சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் வெட்ட வெளியில் மயானம் அருகே (தற்போது இல்லை )
அமைந்திருக்கும் சிறிய அம்மன் கோயில் வெளியே உள்ள லிங்க திருமேனி ....
பார்க்க மிக வித்யாசமான திருமேனி .....
இவரை தரிசனம் செய்ய அருகில் உள்ளோரிடம் விசாரித்து செல்ல வேண்டும் ..

சேட்பட் சிவன் 2

அடுத்து நமக்கு சற்றே ஆறுதல் அளிப்பது சேத்துப்பட்டு மெக் நிக்கோலஸ் தெரு முனையில் உள்ள ஓம் சக்தி பால விநாயகர் திருக்கோயிலில் உள்ள சோமநாத பெருமான் தான் .
சிறிய கோவிலாக இருந்தாலும் பிரம்மாண்டமான விநாயகர் , அம்பாள் , முருகன், பைரவர் அனைவரும் நம்மை வசீகரிக்கும் விதத்தில் எழுந்தருளியுள்ளார்கள் .மிக நேர்த்தியான சிலா ரூபங்கள் ....நன்கு பராமரிக்கப்படும் திருக்கோயில் ....


இன்னும் இதுபோன்று பல திருக்கோயில்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்து நிற்கின்றன ...நம் சிங்கார சென்னையில் 

அன்பர்களே ....
நாம் என்ன செய்யபோகிறோம் ?  
இப்போது விழித்து கொள்ளாவிட்டால் பின் எப்போது ?

சென்று தரிசனம் செய்யுங்கள் குடும்பத்தாருடன் ...

பிரபல திருக்கோயில்களை , கூட்டத்துடன் கூட்டமாக , வரிசையில் நின்று தரிசிப்பதை தவிர்த்து இத்தகைய திருகோயில்களை நாடி சென்று வணங்குங்கள் ....


இருக்கும் திருக்கோயில்களையாவது காப்பாற்ற வேண்டும் அல்லவா? 
அந்நியர்களின் கைகளிலிருந்து தன் இன்னுயிரை ஈந்து காப்பாற்றப்பட்ட அந்த மூலவர்களை நாம் சென்று தரிசிக்க கூட தயங்குகிறோம் என்பதே கசப்பான உண்மை ....

அகஸ்தீஸ்வரர்-அமைந்தகரை 



கைலாயநாதர் --குட்டலை  அம்மன் கோயில் -சேத்துப்பட்டு 
சிவன் கோயில் -சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் 


சோமநாதர் திருக்கோயில் -மெக் நிக்கோலஸ் தெரு -சேத்துப்பட்டு